
மதுரை: மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கொலையான வாலிபரின் தலையை போலீசார் நேற்று இரவு முதல் விடிய, விடிய தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம், பெரிய உலகாணி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (30). ஜேசிபி ஆபரேட்டர். இவர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் தனியார் தொழிற்சாலை முன்புள்ள பஞ்சர் கடைக்கு அடிக்கடி வந்து செல்லும்போது மதுரை மாவட்டம், கொக்குளம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ், பாரதிராஜ் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. மூவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவது வழக்கம். மூவருக்கும் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. கடந்த அக்.29ம் தேதி மணிகண்டன் திடீரென மாயமானார். இது குறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று காலை மணிகண்டனை கொலை செய்துவிட்டதாக பாரதிராஜ், விக்னேஷ் ஆகியோர் ஆவியூர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது, கடந்த 29ம் தேதி மூவரும் மது அருந்தும்போது கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாங்கள் மணிகண்டனை கத்தியால் குத்தி கொலை செய்தோம். திருமங்கலம் தாலுகா கொக்குளம் செல்லும் சாலையில் உள்ள பாலத்தின்கீழ் உடலை தூக்கி எறிந்துவிட்டோம் என தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அழுகிய நிலையில் மணிகண்டனின் உடலை கைப்பற்றினர். ஆனால் உடலில் தலை இல்லை. கொலை நடந்து 15 நாட்களாகிவிட்டதால் தலையை விலங்கு ஏதும் கவ்வி சென்றுள்ளதா என தேடி வருகின்றனர். இதனிடையே சம்பவ இடத்தில் கூடிய மணிகண்டனின் உறவினர்கள், அவரது தலையை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கூறி அமரர் ஊர்தியை எடுக்க விடாமல் முற்றுகையிட்டனர். இதையடுத்து போலீசார் உடல் கிடந்த பகுதியில் தலை கிடக்கிறதா என நேற்று இரவு முதல் விடிய, விடிய தேடினர்.
தகவல் : DINAKARAN