தேனி: சென்னையில் இருந்து கம்பத்துக்கு நேற்று காலை ஆம்னி பேருந்து ஒன்று வந்தது. அந்த ஆம்னி பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் மதுபோதையில் உறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் செம்பட்டி அருகே வந்த போது, அந்த குறிப்பிட்ட தனியார் ஆம்னி பேருந்தை நடுவழியில் ஓட்டியிருக்கிறார். பேருந்து தாறுமாறாக சென்றதை கவனித்த பயணிகள் ஆடிப்போனார்கள். பயந்து போன பயணிகள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், பேருந்தை பறிமுதல் செய்ததுடன் அபராதம் விதித்தனர்.
சென்னையில் இருந்து தேனிக்கு தினமும் ஏராளமான ஆம்னி பேருந்துகள் செல்கின்றன. கேரளாவின் எல்லையை ஒட்டியுள்ள தேனிக்கு பலரும் தற்போது சுற்றுலா வருகிறார்கள். தேக்கடி, வாகமன், மூணாறு செல்வோர், தேனி ஆம்னி பேருந்துகளில் ஏறி வந்து , அதன்பின்னர் தேனியில் இறங்குகிறார்கள். அங்கிருந்து கார் மூலம் செல்கிறார்கள். கொடைக்கானல் செல்வோரும் வத்தலக்குண்டு வரை வந்து அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார்கள். சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் தடம் என்பதால், எப்போது ஏராளமான ஆம்னி பேருந்துகள் செல்லும்.

dஅந்த வகையில் சென்னையில் இருந்து கடந்த மே 28ம் தேதி இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று கம்பம் நோக்கி புறப்பட்டது. அதில், 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்திருக்கிறார்கள். பேருந்தை தஞ்சையை சேர்ந்த வினோத் (32) என்பவர் ஓட்டி வந்துள்ளார். ஆம்னி பேருந்து திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே நேற்று காலை வந்தது. அப்போது சாலையில் தாறுமாறாக செல்வதுமாக பஸ் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், சந்தேகம் அடைந்த பயணிகள் சிலர் இருக்கையில் இருந்து எழுந்து, டிரைவரின் இருக்கை நோக்கி சென்றார்கள்.
அங்கு டிரைவர், தனது இருக்கைக்கு பின்னால் தூங்கி கொண்டு இருந்திருக்கிறார். பஸ்சை கிளீனராக வந்த 30 வயது வாலிபர் ஓட்டிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது டிரைவர் வினோத் மது போதையில் இருந்தாராம். வரும் வழியில் பஸ்ஸை நிறுத்த சொல்லி விட்டு தானே பஸ்சை ஓட்டிச் செல்வதாக கிளீனர் தெரிவித்தாராம். இதனால், பயணிகள் சிலர் பஸ்சை நிறுத்துமாறு கூச்சலிட்டனர். ஆனால், பஸ் நிற்காமல் தொடர்ந்து கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இதற்கிடையே பயத்தில் அலறிய பயணிகள் சிலர், மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து தேனி காவல் நிலையம் முன்பு போலீசார் அந்த பஸ்சை தடுத்து நிறுத்தி மடக்கினர். பின்னர் டிரைவரை எழுப்பி சோதித்துப் பார்த்த போது அவர் மதுபோதையில் இருந்தது உறுதியாகியது. டிரைவர் வினோத்துக்கு மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக போலீசார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். பஸ்சை பறிமுதல் செய்து தேனி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மதுபோதையில் ஆம்னி பஸ் டிரைவர் சுயநினைவை இழந்ததும், கிளீனர் பஸ்சை ஓட்டியதும் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தகவல் : ONEINDIA
