
- 7 பைக்குகள் பறிமுதல்
- 30க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை
நாகர்கோவில்:குமரி மாவட்டத்தில் பைக் திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இது தொடர்பான புகார்களின் பேரில் அந்தந்த காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, வடசேரி அசம்பு ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் இருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவர்கள் வந்த பைக் ஆவணங்களை சரி பார்த்தனர். அப்போது அந்த பைக் திருட்டு பைக் என்பது தெரிய வந்தது. இதையடுத்து பைக்கில் வந்த 2 பேரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அந்த பைக் நாகர்கோவில் மேலரதவீதியை சேர்ந்த நரேந்திரகுமார் (46) என்பவருக்கு சொந்தமானது என்றும், ஏற்கனவே இந்த பைக் திருடப்பட்டதாக கடந்த 5.7.2025 அன்று புகார் அளிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் அவர்கள் திருநெல்வேலியை சேர்ந்த மாரியப்பன் (22) என்பதும், மற்றொருவர் தெள்ளாந்தி பகுதியை சேர்ந்த 15 வயது இளம் சிறார் என்பதும் தெரிய வந்தது. மேலும் 2 பேரும் சேர்ந்து வன்னியூர் ஜார்ஜ் துரை என்பவரின் பைக்கை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பைக்கையும் போலீசார் மீட்டனர்.
தகவல் : DINAKARAN