தமிழகத்தை பரபரப்பிற்கு ஆளாகியுள்ள டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறது. குறிப்பாக காலி பாட்டில் விவகாரம் தான் விஸ்வரூபம் எடுக்கும் வகையில் காணப்படுகிறது. இதுபற்றி விசாரணையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது என்று அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுதொடர்பான விசாரணை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சில முக்கிய விஷயங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, டாஸ்மாக் முறைகேட்டில் காலி பாட்டில்களை வைத்து நடந்த முறைகேடு தான் பெரிதாக இருக்கிறதாம்.
காலிபாட்டில்சர்ச்சை
180 மில்லி லிட்டர் கொண்ட ஒரு பாட்டிலின் விலை 6 ரூபாய். இதனை கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்து நிதியை ஒதுக்குகின்றனர். இந்த பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டு மீண்டும் திரும்ப பெறப்பட்டு மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. அப்படி செய்யும் அந்த பாட்டிலின் விலை என்பது 2 ரூபாய். இதை அடிப்படையாக வைத்து கொள்முதல் விலையில் டாஸ்மாக் நிர்வாகம் திருத்தம் செய்து நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும்.
மறுசுழற்சி விவகாரம்
ஆனால் மறுசுழற்சி செய்யப்பட்ட பாட்டிலுக்கும் 6 ரூபாய் கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்து நிதியை விடுவித்துள்ளனர். அப்படியெனில் கூடுதலாக 4 ரூபாய் செலவு செய்துள்ளனர். இது அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் விஷயம். 180 மில்லிலிட்டர் பாட்டிலுக்கு பின்பற்ற அதே வழிமுறையை 375 மில்லிலிட்டர், 750 மில்லிலிட்டர், 1,000 மில்லிலிட்டர் பாட்டிலுக்கும் பின்பற்றியுள்ளனர். அப்படியெனில் பல கோடி ரூபாய் பணம் வீணாகியிருப்பதாக தெரிகிறது.
ஒருகார்டான்பாக்ஸ்விலை
இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு கிடைத்த தகவலின் படி, மேற்சொன்ன காலி பாட்டில் விவகாரத்தில் அமலாக்கத்துறை சற்று கூடுதல் முக்கியத்துவம் அளித்து பார்க்க தொடங்கியுள்ளது. இதில் மேலும் சில தகவல்களும் இருக்கின்றன. நாள்தோறும் 1.6 லட்சம் கார்டான் பாக்ஸ் நிரம்பிய மதுபான பாட்டில்களை ஆலைகளில் இருந்து டாஸ்மாக் நிர்வாகம் கொள்முதல் செய்கிறது. ஒரு கார்டான் பாக்ஸின் விலை 960 ரூபாய். இதில் பாட்டில்களின் விலை மட்டும் 288 ரூபாய்.
தேவையற்றசெலவு
இந்த சூழலில் ஒரு கார்டான் பாக்ஸிற்கு கூடுதலாக 135 ரூபாயை மதுபான ஆலைகளுக்கு டாஸ்மாக் செலுத்தி வருகிறது. இவற்றில் இருந்து தான் 70 சதவீத பாட்டில்கள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. எனவே தாறுமாறாக நிதியை செலவு செய்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. டாஸ்மாக் முறைகேட்டில் இன்னும் என்னென்ன விஷயங்கள் வெளிவருமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தகவல் : TAMILSAMAYAM
