
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி குலாலர் தெரு பகுதியில் வசித்து வருபவர் கனிச்செல்வம். இவரது மனைவி பெயர் சரஸ்வதி. கனிச்செல்வம் – சரஸ்வதிக்கு ஜெயலட்சுமி என்ற மகளும், செல்வராஜ் என்ற மகனும் உள்ளனர்.
தந்தை மகனுக்கு வாக்குவாதம்
இந்த நிலையில் கனி செல்வம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக அவரது வீட்டில் வைத்திருந்த 4000 ரூபாய் பணத்தை எடுத்துச் சென்று குடித்துவிட்டு செலவழித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது மகன் செல்வராஜ் (17) எதற்காக வீட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்து செலவு செய்தால் எனக் கேட்டுள்ளார்.
அதனால் தந்தை மகனுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தந்தையின் பேச்சுகளால் ஆத்திரம் அடைந்த மகன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை கனிச்செல்வதை இடது பக்க கண்ணம் மற்றும் காதின் அருகில் வெட்டியுள்ளார்.
அதில் கனிச்செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து கூமாபட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மகன் கைது
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பலியான கனி செல்வத்தின் உடலை கைப்பற்றி வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவன் செல்வராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணத்தை எடுத்துச் சென்று குடித்து செலவு செய்த தந்தையை மகன் வெட்டி கொலை செய்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
தகவல் : TAMILSAMAYAM
