விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கஞ்சா போதையில் மனைவி மற்றும் பெற்ற தாய் உள்ளிட்ட மூவரைத் துப்பாக்கியால் சுட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வாக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தென்னரசு. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான், இவர் லாவண்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பெரும் கனவுடன் குடும்ப வாழ்க்கையை நோக்கி நகர்ந்த லாவண்யாவிற்கு, கணவர் தென்னரசுவின் கஞ்சா பழக்கம், பேரிடியாக விழுந்தது.
கஞ்சா மற்றும் மதுபோதைக்கு அடிமையான தென்னரசு, எப்போதும் மது மயக்கத்தில் தான் மிதப்பார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, அதில் மனைவியை அடித்து சித்ரவதை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை காலை, விடிந்ததும் விடியாததும் தென்னரசு கஞ்சா போதையில் மிதந்துள்ளார். அதனால் விரக்தி அடைந்த மனைவி லாவண்யா, கணவரைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். தன்னுடைய கஞ்சா சுதந்திரத்திற்கு தடையாக இருந்ததால் மனைவி மீது தென்னரசு ஆவேசமடைந்துள்ளார். அப்போதுதான் அந்த படுபயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டிற்குள் சென்ற தென்னரசு உள்ளே வைத்திருந்த ஏர் கன்னை எடுத்து வந்து வெளியே கத்திக்கொண்டிருந்த மனைவி லாவண்யாவை சுட்டுள்ளார். சத்தம் கேட்டு சம்பவத்தை தடுக்க வந்த பெற்ற தாய் பச்சையம்மாளையும் அவர் சுட்டுள்ளார். இரு உயிர்களின் அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த சித்தப்பா மகன் கார்த்திகையும் அவர் ஏர் கன்னால் சுட்டுள்ளார். குண்டு பாய்ந்து கீழே சரிந்த மூவரும் வலியால் கதற, ஊர்க்காரர்கள் சம்பவ இடத்தில் கூடினர்.
தகவல் : NEWS18TAMIL
