மயிலாடுதுறையில் இரு இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது . சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமம் வடக்குதெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் சேர்ந்து சாராய வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களை தட்டிக் கேட்பவர்களை அடிப்பதும், கொலை மிரட்டல் விடுப்பதும் இவர்களின் வாடிக்கை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை காவல்துறை சார்பில் முட்டம் பகுதியில் சாராய ரெய்டு நடைபெற்றது .
அப்போது சாராய வியாபாரி ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு ஜாமினில் வந்த ராஜ்குமார் மீண்டும் சாராய விற்பனையை தொடங்கி இருக்கிறார் அப்போது தெருவில் ஏன் சாராயம் விற்கிறீர்கள் என்று கேட்ட ஒரு சிறுவனை சாராய வியாபாரிகள் அடித்து விரட்டி உள்ளனர். சிறுவனை தாக்கியது குறித்து முட்டம் வடக்குத் தெருவை சேர்ந்த ஹரிஷ் மற்றும் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த ஹரிசக்தி ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சாராய வியாபாரிகளான ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் சேர்ந்து ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் கத்தியால் குத்தியதில் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். பாலிடெக்னிக் படித்துவிட்டு வேலை தேடி வந்த ஹரிஷ், இன்ஜினியரிங் படித்து வந்த ஹரிசக்தி இருவரும் சாராய வியாபாரிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது.
தகவல் : NEWS18TAMIL
