சென்னையில் போதை பவுடரை ஊசி மூலமாக செலுத்திக்கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் இதேபோல இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது அடுத்த மரணமும் நிகழ்ந்துள்ளது. சென்னையில் என்ன தான் நடக்கிறது என்பதை விரிவாக காணலாம்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். 19 வயதாகும் இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பிஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி ராகுல் அவரது நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதையடுத்து ராகுல் அவரது நண்பர்களுடன் சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்து உள்ளார். இரவு உள்ளே சென்ற இவர் அடுத்த நாள் காலை வரை எழுந்திருக்காமல் உறக்க நிலையில் இருந்துள்ளார்.
இதையடுத்து அவரது நண்பர்கள் அங்கிருந்தவர்களின் உதவியோடு ராகுலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு உள்நோயாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராகுல் நேற்று உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். அதில் போதை பவுடரை ஊசி மூலமாக உடலில் செலுத்தி கொண்டதன் காரணத்தாலும் அதிகப்படியான போதைப் பொருளை பயன்படுத்தியதாலும் வலிப்பு ஏற்பட்டு ராகுல் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இரண்டாவது நபர் போதை ஊசியால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து ராகுலின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு போதை பொருள் எங்கிருந்து கிடைக்கிறது என்பது குறித்து அண்ணா சாலை போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராகுலைப் போல கடந்த 10 நாட்களுக்கு முன்பு புளியந்தோப்பு கனகராய தோட்டம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் சதீஷ் போதை ஊசியை கழுத்தில் போட்டுக்கொண்டதால் உயிரிழந்தார். இவர் டைக்னோபின் என்னும் கொடிய போதைப்பொருளை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் தான் சதீஷ் தனது வீட்டில் சுயநினைவின்றி மயக்கத்தில் இருந்ததை கண்ட அவரது அத்தை அவரை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கிச்சென்றுள்ளார். ஆனால் சதீஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் கல்லூரி மாணவர் ஒருவரும் போதை ஊசியால் மரணமடைந்திருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் எங்கிருந்து இந்த போதைப்பொருட்கள் மாணவர்களுக்கு கிடைக்கிறது என்பதை கண்டறிந்து தடுக்க வேண்டும் என்ற குரல் பெற்றோர்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.
தகவல் : ZEENEWS
