
கோவை: கோவையை அடுத்த கோவைப்புதூர் அருகே உள்ள திரு வி.க. நகரை சேர்ந்த பாலன் என்பவருடைய மனைவி சாவித்திரி.இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் சவுமியா என்ற மகளை மாலையில் பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்து விட்டு, வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது தாயுடன் நடந்து சென்ற மகளுக்கு எங்கிருந்தோ வந்த சரக்கு வாகனம் மோதியது. நண்பனுக்கு ஓட்டிப்பழக வண்டியை கொடுத்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. கோவையை அடுத்த கோவைப்புதூர் அருகே உள்ள திரு வி.க. நகரை சேர்ந்த பாலன்- சாவித்திரி தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.பாலன் கோவை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இதில் ஒரு மகள் தான் சவுமியா.இவர் உக்கடம் கெம்பட்டி காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சாவித்திரி தான், தினமும் காலையில் தனது மகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு மாலையில் அவரை வீட்டுக்கு அழைத்துச்செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி சாவித்திரி நேற்று முன்தினம் காலையில் தனது மகளை பள்ளிக்கூடத்தில் விட்டார். பின்னர் மாலையில் அவரை பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்து விட்டு, வீட்டுக்கு செல்வதற்காக தனது மகளுடன் நடந்து சென்றிருக்கிறார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் சவுமியா மீது வேகமாக மோதியது. இதில் அந்த வாகனத்தின் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட அவர் சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டார். இந்த விபத்தில் சவுமியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கோவை மாநகர மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இதில் விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனம் பலியான சவுமியாவின் அக்காள் காவியாவின் கணவர் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மதுபோதையில் இருந்த ராஜேந்திரன் தனது நண்பர் கண்ணன் (அவரும் போதையில் இருந்தாராம்) என்பவருக்கு வாகனம் ஓட்ட கற்றுக்கொடுத்ததும், ஓட்டுனர் உரிமம் இல்லாத கண்ணன் அந்த சரக்கு வாகனத்தை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த சரக்கு வாகனத்தின் உரிமையாளரான ராஜேந்திரன், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டிய கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
தகவல் : ONEINDIA