
பூந்தமல்லி அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர்களை விசாரிக்க சென்ற காவலர், கஞ்சா போதை ஆசாமிகளால் ஓடஓட விரட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற திருவிழாவுக்கு வந்த திருமாவளவன் என்பவரிடம் கஞ்சா போதையில் இருந்த மூன்று பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததால், கத்தியால் தாக்கிவிட்டு, பணத்தை பறித்துச் சென்றனர்.
இதுதொடர்பான புகாரில், பூந்தமல்லி காவலர் சரவணன் என்பவர் இதுகுறித்து விசாரிக்க சென்றார். அப்போது கஞ்சா போதையில் இருந்த மூன்று பேர் அவரை கையில் கத்தியுடன் ஓடஓட விரட்டினர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதையடுத்து பூந்தமல்லி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, கஞ்சா போதையில் காவலரை விரட்டிய சபரி (19), சூர்யா (20), சந்தோஷ் (19) மற்றும் இரண்டு சிறுவர்கள் என 5 பேரை மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில், அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி மக்களிடம் செல்போன், பணம் ஆகியவற்றை பறித்து வந்தது அம்பலமானது. அதே போல் கோயில் திருவிழாவில் பலரிடம் பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து செல்போன், பைக், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர், மூன்று பேர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவர்கள் செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர். கஞ்சா ஆசாமிகள் காவலரை ஓடஓட விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் : KAMADENU
