தஞ்சாவூரில் லாரியில் ரகசிய அறை வைத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் போலீஸ் எஸ்.ஐ டேவிட் தலைமையிலான தனிப்படையினர் பேராவூரணி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இன்று காலை பேராவூரணியிலிருந்து முடச்சிக்காடு பகுதியை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படையினர் லாரியை வழிமறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் லாரியில் ஒரு ரகசிய அறை அமைத்து அதில் சுமார் 330 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் இந்த லாரியை பின் தொடர்ந்து பாஜக கொடியுடன் சொகுசு காரில் வந்தவர்களையும் காவல்துறையினர் பிடித்தனர்.
இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத், ஒரத்தநாடு போலீஸ் ஏ.எஸ்.பிசஹனாஸ் இலியாஸ், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி ரவிச்சந்திரன், பேராவூரணி இன்ஸ்பெக்டர் பசுபதி உள்ளிட்டோர் வந்து விசாரணை நடத்தினர்.
தகவல் : INDIANEXPRESS
