சமயபுரம் வாரச்சந்தை பகுதியில் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த 2021 செப்டம்பர் 21-ஆம்தேதி லாரி ஒன்றை மடக்கிப் பிடித்தனர். அந்த லாரியில் 6 பண்டல்களில் மொத்தம் 132 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக லாரி ஓட்டுநர்கள் தேனி மாவட்டம் காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் மூவேந்திரன் (31), கரூர் வேலாயுதம்பாளையம் காந்திநகரைச் சேர்ந்த அசோக்குமார் மகன் பிரபு (42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டையிலுள்ள போதைப் பொருள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சவழக்கை விசாரித்த நீதிபதி ஏ. கே. பாபுலால் தீர்ப்பளித்தார். இதில், முதல் இரு குற்றறவாளிகளான மூவேந்திரன், பிரபு ஆகியோரின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மூவேந்திரனுக்கு போதைப் பொருள் தடுப்புச் சட்ட இரு பிரிவுகளின் கீழ் தலா 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 1. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. பிரபுவுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தகவல் : GETLOKALAPP
