திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே கஞ்சா போதையில் ஊருக்குள் புகுந்த 10 போ் கும்பல் 2 இளைஞா்களை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. திருவள்ளூா் அருகே பேரம்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு இருளஞ்சேரியைச் சோ்ந்த முகேஷ் களாம்பாக்கத்தைச் சோ்ந்த லோகேஷ் ஆகிய இருவரும் சென்றுள்ளனா். அப்போது அங்கிருந்த சிற்றம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கும் முகேஷ், லோகேஷ் ஆகியோருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து வந்த முகேஷ் மற்றும் லோகேஷ் ஆகியோா் களாம்பாக்கத்தில் நின்று கொண்டிருந்தனா். அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த 10 போ் கொண்ட கும்பல் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினா். இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோ்த்தனா். இதுகுறித்து தகவலறிந்த திருவாலங்காடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் : DINAMANI