மதுரை, ஜூலை 18: மதுரை ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பிகை நகரை சேர்ந்தவர் உச்சிமாகாளி மகன் திருப்பதி (எ) கவாத்து திருப்பதி(50). பிரபல ரவுடி. இவர் மீது கொலை மற்றும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று ஜீவா நகர் பகுதியில் இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், திருப்பதியை சுற்றி வளைத்து அவரிடமிருந்த 2 கிலோ 60 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.
போலீசாரின் விசாரணையில், வழக்கு செலவிற்காக கேரளா மாநிலம் தென்மலையில் இருந்து 4 கிலோ கஞ்சாவை கொள்முதல் செய்த கவாத்து திருப்பதி, அதில் 2 கிலோ கஞ்சாவை திருநெல்வேலியில் விற்றதும், மீதமுள்ள கஞ்சாவை மதுரையில் விற்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், அவரை கைது செய்தனர். வழக்கு செலவுக்காக கஞ்சா விற்று ரவுடி கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
தகவல் : DINAKARAN