வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான 560 கிலோ கொக்கைன், 40 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தலை டெல்லி போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.

4 மாதங்களுக்கு முன்பு டெல்லி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், அதன் பிறகு, போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடமாட்டத்தை சிறப்புப் பிரிவு கண்காணித்து வந்துள்ளது.
தலைநகர் டெல்லியில், ரூ.5,000 கோடி மதிப்பிலான 560 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் மற்றும் 40 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தலை டெல்லி போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் தெற்கு டெல்லியின் மஹிபால்பூர் பகுதியில் இருந்து சிறப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நான்கு பேரை போதைப்பொருளுடன் கைது செய்தனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச சந்தை 5000 கோடி ரூபாய் மதிப்பு இருக்கும்.” என்று கூறினார்.
பண்டிகைக் காலம் என்பதால், போதைப்பொருள் தேவை அதிகமாகியுள்ளது. இவை டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்.சி.ஆர்) விநியோகிக்கப்பட இருந்தது. நான்கு மாதங்களுக்கு முன்பு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பிறகு, சிறப்புப் பிரிவு குற்றம் சாட்டப்பட்டவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர். போதைப்பொருள்-பயங்கரவாத கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
தகவல் : INDIANEXPRESS
