
ஹைதராபாத் நகரில் 27 வயதான கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.பாலியல் வல்லுறவுக்கு எதிரான சட்டங்களில் நிறைய மாற்றங்கள் செய்த பிறகும், இந்தியாவில் பெண்களுக்கு உண்மையிலேயே பாதுகாப்பான சூழ்நிலை இருக்கிறதா என்ற கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது. இந்த சம்பவத்தில் கைதாகியுள்ள நான்கு பேரில், மூவரின் குடும்பத்தினருடன் பிபிசி தெலுங்கு செய்தியாளர் தீப்தி பத்தினி சந்தித்துப் பேசினார்.இந்தச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நால்வரில் மூன்று பேர், ஹைதராபாத்தில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். நான்காவது நபர், அருகிலுள்ள வேறொரு கிராமத்தைச் சேர்ந்தவர்.குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது இன்னும் விசாரணை தொடங்கவில்லை, குற்றவாளிகள் என நிரூபிக்கப்படவில்லை என்பதால், அந்தக் குடும்பத்தினரைப் பற்றிய அடையாளங்களை எங்களால் வெளியிட முடியவில்லை.பாலியல் வல்லுறவு மற்றும் கொலை சம்பவம் பற்றிய செய்தி வெளியானதில் இருந்து, இது தொடர்பாகக் கைதானவர்களின் கிராமங்களுக்கு, கடந்த சில தினங்களாக ஊடகத் துறையினர் படையெடுத்து வருகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினரைப் பேட்டி எடுக்க அவர்கள் செல்கின்றனர்.

குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர்களில் ஒருவருடைய குடும்பத்தினரை இந்தக் கிராமத்தில், அவர்களின் வீட்டில் நாங்கள் சந்தித்தபோது, வீடுகளைக் காட்ட கிராமவாசி ஒருவர் முன்வந்தார். தங்களுடைய கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற கொடூரமான செயலில் ஈடுபட்டிருப்பதை அறிந்து தாங்கள் இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாக கிராம மக்கள் கூறினர்.“எங்களில் பெரும்பாலானவர்கள் விவசாயத் தொழிலாளர்கள். தினமும் கூலிக்குச் சென்றுதான் வாழ்க்கை நடத்தி வருகிறோம்” என்று கிராமவாசி ஒருவர் தெரிவித்தார்.சாக்கடை நீர் வழிந்தோடும் தெருக்களின் வழியாக எங்களை அழைத்துச் சென்று, குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவருடைய வீட்டைக் காட்டினார்கள்.குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரின் தாயார், இரண்டு அறைகள் கொண்ட, ஓலை வேய்ந்த கூரை வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். உடல் தளர்ந்து, உட்கார முடியாமல் இருந்த அவர், தனது கணவரை நோக்கி கை காட்டினார்.என்ன நடந்தது என தமக்குத் தெரியாது என்று, தினசரி கூலித் தொழிலாளியான அவருடைய கணவர் கூறினார். “எனக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நாளைக்கு என் மகளுக்கு இப்படி நடந்தால் நான் அமைதியாக உட்கார்ந்திருக்க மாட்டேன். அதனால்தான், காவல் துறையினர் சொல்லும் செயலை என் மகன் செய்திருந்தால், அவனை தூக்கில் போட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கரங்களை கூப்பியபடி அவர் குறிப்பிட்டார்.
“என்னிடம் என் மகன் எதுவும் சொல்லவில்லை. வீட்டில் தூங்கினான். அன்று நள்ளிரவில் காவல் துறையினர் வந்து, என் மகனை அழைத்துச் சென்றனர். இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பதை, அப்போது கூட நான் அறிந்திருக்கவில்லை. காவல் நிலையத்துக்கு வருமாறு என்னிடம் காவல் துறையினர் கூறியபோதுதான், இந்தச் சம்பவத்தின் விவரங்கள் பற்றி தெரிய வந்தது. என் மகனுக்காக ஒரு வழக்கறிஞரை நியமிக்கும் நிலையில் கூட நான் இல்லை. அவ்வாறு வழக்கறிஞர் நியமிக்கவும் விரும்பவில்லை. இந்தச் செயலை என் மகன் செய்திருந்தால் அவனுக்காக வாதாட என் பணத்தையோ அல்லது சக்தியையோ செலவிட நான் தயாராக இல்லை” என்று அந்தத் தந்தை கூறினார்.அங்கிருந்து சில வீடுகள் தள்ளி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் இன்னொருவரின் வீடு உள்ளது. மூன்று அறைகள் கொண்ட அந்த வீட்டின் முன்புற களத்தில் அவருடைய தாயாரும் மனைவியும் அமர்ந்திருந்தனர்.
தாம் 7 மாத கர்ப்பமாக இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டவரின் மனைவி தெரிவித்தார். “நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். சுமார் ஒன்றரை ஆண்டுகளாக அவரை நான் அறிவேன். 8 மாதங்களுக்கு முன்பு எங்கள் திருமணம் நடந்தது. அவருடைய பெற்றோர்கள் ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பிறகு ஒப்புக்கொண்டனர்” என்று அவருடைய மனைவி தெரிவித்தார்.தனது மகனுக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதற்கு அவன் மருத்துவம் பார்த்து வருவதாகவும் தாயார் கூறினார். “இதுபோன்ற ஒரு செயலை என் மகன் செய்திருப்பான் என என்னால் நம்ப முடியவில்லை. யாரோ கட்டாயப்படுத்தி அவனை மது குடிக்க வைத்து இந்த வழக்கில் சிக்க வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.இருந்தபோதிலும், இந்தச் செய்தியைப் பார்த்தபோது மிகவும் கவலையடைந்ததாக அவருடைய மனைவி கூறினார்.
தகவல் : BBC
