பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள எம்எஸ்ஆர் நகரின் அடுக்குமாடி குடியிருப்பில், வசிக்கும் தம்பதியினர் தங்கள் பால்கனி தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்த்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூருவில் வசிக்கும் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்கள் பால்கனி தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்த்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். சாகர் குருங் 37 மற்றும் அவரது மனைவி ஊர்மிளா குமாரி 38 ஆகிய தம்பதியினர், தங்கள் தோட்டத்தின் வீடியோக்களை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளதை அடுத்து அவர்கள் போலீசில் சிக்கினர். அறிக்கையின்படி பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள எம்எஸ்ஆர் நகரின் அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்துவரும் இந்த தம்பதியினர், சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாம்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சாகர் குருங் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது மனைவி ஊர்மிளா ஹோம் மேக்கர் ஆவார். எனவே அவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்க முடிவு செய்து சமீபகாலமாக பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவர்கள் தங்கள் பால்கனியில் உள்ள பூந்தொட்டியில் விதவிதமான செடிகளை வளர்த்து வருகின்றனர். அதில் இரண்டு தொட்டிகளில் மரிஜுவானா செடிகளும் நடப்பட்டன.
இந்நிலையில், சமீபத்தில் ஊர்மிளா தனது பால்கனியில் பல்வேறு செடிகளை வளர்த்து, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டார். வீட்டின் தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவது அவர் வெளியிட்ட வீடியோ மூலம் தெரியவந்தது. இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து, யூசர்களிடையே விவாதப் பொருளாக மாறிய உடனேயே, இந்த விவகாரம் காவல்துறையின் கவனத்துக்கு வந்தது. இதனையடுத்து நவம்பர் 5ஆம் தேதி அன்று போலீசார் அவர்களது வீட்டில் சோதனை நடத்தினர்.
இதற்கிடையில் போலீசார் வருவதற்குள் தொட்டியில் இருந்த கஞ்சா செடிகளை அகற்றினார். அவர்களிடம் நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில், கஞ்சா செடிகள் குறித்த கேள்விகளுக்கு தம்பதியினர் பதிலளிக்கவில்லை. இருப்பினும், சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகள் இரண்டு தொட்டிகள் காலியாக இருப்பதை கவனித்தனர். இதிலிருந்து செடிகள் விரைவாக அகற்றப்பட்டதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, கஞ்சா செடி வளர்த்ததை தம்பதியினர் ஒப்புக்கொண்டனர் மற்றும் தாங்கள் கஞ்சா செடிகளை அப்புறப்படுத்திய குப்பைத் தொட்டியை காவல்துறையினரிடம் காட்டினர். பால்கனியில் மொத்தம் 17 தொட்டிகள் இருந்தன, அவற்றில் இரண்டு தொட்டிகளில் கஞ்சா இருந்தது தெரிய வந்துள்ளது.
தகவல் : NEWS18TAMIL
