சென்னை : சென்னையில் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தலைக்கேறிய மது போதையில் வயிறு முட்ட சிக்கன் ரைஸ் சாப்பிட்ட நபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பிறந்தநாள் என்றால் கோவிலுக்கு செல்வது, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவது, கேக் வெட்டுவது என இருந்த காலம் எல்லாம் தற்போதைய நவீன யுகத்தில் மாறிவிட்டது. பிறந்தநாள் பார்ட்டி என்ற பெயரில் வயிறு முட்ட குடித்துவிட்டு பட்டா கத்தியால் கேக் வெட்டுவது, பிறந்தநாள் கொண்டாடும் நபர்கள் முகத்தில் கேக் அப்புவது, ஏன் அவர்களை கட்டிப்போட்டு அடிப்பது என பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எல்லை மீறி வருகிறது.

பிறந்த நாள் கொண்டாட்டம்
எல்லை மீறிய பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கொலை போன்ற கொடூர நிகழ்வுகளில் முடிவதும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் பிறந்தநாள் பார்ட்டியின் போது அளவுக்கு மீறிய மது போதையில் வயிறு முட்ட சிக்கன் ரைஸ் சாப்பிட்ட நபர் உயிரிழந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் நேற்று சென்னை ரெட்டேரி சாலையில் உள்ள பிரபல ஏசி பாரில் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடி இருக்கிறார்.
மது, சிக்கன் ரைஸ்
இந்த கொண்டாட்டத்தில் அவருடன் வேலை பார்க்கும் ஊழியர்கள் நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று இருக்கின்றனர் அதில் வியாசர்பாடியை சேர்ந்த பட்டதாரியான மகா விஷ்ணு என்பவரும் பங்கேற்றிருக்கிறார். பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டியதோடு மதுபான கூடத்தில் மது அருந்தி இருக்கின்றனர் உற்சாகத்தில் அளவுக்கு அதிகமாக மகாவிஷ்ணு மது அருந்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விடுதியில் வழங்கப்பட்ட சிக்கன் ரைஸ் சாப்பிட்ட மகாவிஷ்ணு பிறந்தநாள் பார்ட்டியை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

மர்ம மரணம்
இந்நிலையில் காலை நீண்ட நேரம் ஆகியும் மகாவிஷ்ணு எழவில்லை. மேலும் அசைவின்றி அவர் படுத்து கிடந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை எழுப்ப முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால் மகாவிஷ்ணு எழாததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு மகாவிஷ்ணுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்திருக்கின்றனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில் தகவல் அறிந்து சென்ற போலீசார் மகாவிஷ்ணுவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
என்ன காரணம்
மது போதையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட நபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது தொடர்பாக மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பொதுவாக மது அருந்தும் போது ஜீரண மண்டலம் வெகுவாக பாதிக்கப்படும். அப்போது கிரில் சிக்கன், சிக்கன் ரைஸ் உள்ளிட்ட வறுத்த அல்லது எண்ணெய் அதிகம் உள்ள பொருட்களை சாப்பிடும் போது ஜீரணமாவது பாதிக்கப்படும். மேலும் செரிமானமாகத உணவுப்பொருட்கள் மூச்சுக் குழாய்க்குள் செல்லும் ஆபத்து உள்ளது. எனவே மது அருந்துவதையும், இரவு நேரங்களில் ஹெவியான உணவுகளை எடுத்துக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
தகவல் : ONEINDIA
