சேலம் மாவட்டம் எடப்பாடியில் மகனை இரும்பு ராடால் அடித்து கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகேயுள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மகன் சீனிவாசன், டூவீலர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு, அவருக்கு திருமணமான நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன் அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
இதனால், கவுண்டம்பட்டியில் உள்ள வீட்டில் மாதேஸ்வரனும், சீனிவாசனும் மட்டும் வசித்து வந்துள்ளனர். நேற்று மது போதையில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சீனிவாசன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை தாக்கி இருக்கிறார். உடனே சீனிவாசனின் வீட்டிற்கு சென்ற சிறுவனின் தந்தை, அங்கே இருந்த சீனிவாசனின் தந்தை மாதேஸ்வரனிடம் நடந்த விவரங்களை சொல்லி இருக்கிறார்.
தினமும் மது குடித்து வம்பு சண்டையுடன் வீட்டிற்கு வரும் சீனிவாசனுக்கும், அவரது தந்தை மாதேஸ்வரனுக்கும் அவ்வப்போது தகராறும் நடந்துள்ளது. நேற்று இரவு போதையில் வீட்டிற்கு வந்த சீனிவாசனிடம், பக்கத்து வீட்டு சிறுவனை அடித்தது குறித்து மாதேஸ்வரன் கேட்டுள்ளார்.
அதற்கு “அப்படித்தான் அடித்து விரட்டுவேன்” எனக்கூறி தந்தையிடம் சீனிவாசன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இருவரும் போதையில் இருந்த நிலையில், வாக்குவாதம் முற்றி ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
அப்போது அருகில் கிடந்த இரும்பு ராடை எடுத்து, சீனிவாசன் தலையில் மாதேஸ்வரன் தாக்கி இருக்கிறார். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து சீனிவாசன் இறந்தார். இக்கொலை சம்பவம் பற்றி அறிந்த எடப்பாடி போலீசார், மகனை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற தந்தை மாதேஸ்வரனை கைது செய்தனர். சீனிவாசனின் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தகவல் : NEWS18TAMIL
