கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரின் வீட்டில் கஞ்சா பொட்டலத்தை தேடிச் சென்ற போலீசாருக்கு தடை செய்யப்பட்ட வெடிப்பொருள் கிடைத்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொட்டலங்களில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை அமைத்த போலீசார் தகவல் கிடைத்த பகுதியை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். கஞ்சா வாங்குவது போல மப்டியில் சென்று உள்ளூர் குருவிகளிடம் விசாரித்த போலீசாருக்கு சகின், பெனிட் எடிசன், இஸ்ரவேல், மனீஷ் என்ற 4 பேர் கொண்ட கும்பல் குறித்து தெரியவந்தது.
தேடுதலில் கால் கிலோ கஞ்சாவுடன் சிக்கிய 4 பேரையும் பூதப்பாண்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரித்தனர். முக்கிய குற்றவாளியான சகின் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து கன்னியாகுமரி முழுக்க சப்ளை செய்து வந்ததாக தெரியவந்தது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் சகின் வீட்டில் சோதனையிட சென்றனர். அங்குச் சென்ற போலீசார் வீட்டை சோதனை செய்தபோது, அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
சகின் வீட்டில் கஞ்சா பொட்டலங்களுக்கு பதிலாக அங்கு அரசால் தடை செய்யப்பட்ட வெடிப்பொருளான டெட்டனேட்டர்களும், அதற்கு பயன்படுத்தப்படும் வயர்களும் இருந்துள்ளன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில், 14 டெட்டனேட்டர்கள் மற்றும் வயர்களை பறிமுதல் செய்தனர்.
தகவல் : NEWS18TAMIL
