ஆந்திராவில் கஞ்சா கடத்தல் கும்பலை தடுத்து நிறுத்திய போலீசார் மீது, காரை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணவரம் வழியாக கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அலெர்டான போலீசார், கிருஷ்ணவரம் சுங்கச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை மடக்கி விசாரணை நடத்த ஆயத்தமாகினர். உள்ளே இருக்கும் கஞ்சாவை போலீசார் மோப்பம் பிடித்ததை உணர்ந்த கடத்தல்காரர்கள், காரை அங்கிருந்து ஓட்டிச் செல்ல முற்பட்டனர். தடுப்பு வளையத்தை தாண்டி காரை வேகமாக ஓட்டிய கடத்தல்காரர்கள், எதிரே நின்றிருந்த காவலர்களை இடித்து தூக்கி வீசிவிட்டு மின்னல் வேகத்தில் விரைந்தனர்.
போலீஸ்காரர்கள் மீது காரை ஏற்றிவிட்டு தப்பியோடிய கடத்தல்காரர்களை பிடிக்க, அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் பறந்தது. இருந்த போதும் தொடர்ந்து கடத்தல்காரர்களின் காரை சேஸிங் செய்த போலீசார், ஜிலுகுமல்லி அருகே மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
தகவல் : NEWS18TAMIL
