
சேலம்: மது போதையில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய, எஸ்எஸ்ஐ மகன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த பிரமோத் ராஜ் (27), தாரமங்கலம் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த நரேன் (27), பரமத்திவேலூரைச் சேர்ந்த சதீஷ் (27) ஆகியோர் சேலம் ஐந்து ரோடு அமராவதி சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று முன்தினம் மாலை சென்றனர். மது அருந்தும் கூடத்தில் மதுபோதையில் மூவரும் தகராறு செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த அழகாபுரம் காவல் நிலைய எஸ்ஐ சேகர், ரோந்து எஸ்ஐ ராஜேந்திரன் மற்றும் போலீஸார் தகராறில் ஈடுபட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, எஸ்ஐ சேகரை மதுபோதையில் இருந்த பிரமோத்ராஜ், நரேன், சதீஷ் ஆகியோர் தாக்கியுள்ளனர். இதையடுத்து பிரமோத்ராஜ் உள்ளிட்ட 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
காயமடைந்த எஸ்ஐ சேகர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். கைதான பிரமோத்ராஜின் தந்தை வசந்தகுமார் சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ-யாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் : KAMADENU
