Home Uncategorizedபள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை! போதையால் பாதை மாறும் பரிதாபம்

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை! போதையால் பாதை மாறும் பரிதாபம்

by bait
0 comments

சமீப காலமாக 10,11,12ம் வகுப்பு மற்றும் கல்லுாரி மாணவர்கள் சிலர் போதைக்கு அடிமையாவது அதிகரித்துள்ளது. ஓராண்டுக்கு முன் மதுரை அய்யர்பங்களா கல்லுாரி மாணவர் ஒருவர் போதை ஊசி போட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். வாடிப்பட்டி பகுதியில் மாணவர்கள் போதையுடன் பள்ளிக்கு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திருப்பாலை, காமராஜர்சாலை பகுதி பள்ளி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பது அதிகரித்துள்ளது. கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்தின் தனிப்படை போலீசார் கண்காணித்தனர். இரு வாரங்களுக்கு முன் திருப்பாலை பகுதியில் கஞ்சா வாங்கி பயன்படுத்திய மாணவர்களை பிடித்து எச்சரித்த போலீசார், பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பினர்.

இதற்கிடையே மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக தெப்பக்குளம் தர்மராஜ்,22, கணேஷ்நகர் 2வது தெருவைச் சேர்ந்த முத்துவின் 17 வயது மகன், 1வது தெருவைச் சேர்ந்த சின்னானின் 16 வயது மகன், பங்கஜம்காலனி செல்வகுமார்,22, ஆகியோரை காமராஜர் ரோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகில் போலீசார் கைது செய்தனர். 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கல்லுாரி ஒன்றின் அருகில் மாணவியரை சந்திப்பதற்காக காத்திருந்த நண்பர்களுக்கு கஞ்சா விற்ற சுயராஜ்யபுரம் வேல்முருகன்,21, கைது செய்யப்பட்டு, 1.150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. புதுாரில் கஞ்சா விற்ற பிரவீன்குமார்,22, கைது செய்யப்பட்டு 1.100 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் கூறியதாவது: நட்பு வட்டாரம் சரியில்லை என்றால் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்வதை தடுக்க முடியாது. கஞ்சா வாங்க பணம் தேவை என்பதால் வீடுகளில் திருட்டு, நகைபறிப்பு, வழிப்பறியில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. ஓராண்டுக்கு முன் கீழவாசலில் பிளஸ் 2 மாணவரை அலைபேசிக்காக கொலை செய்தனர். அதில் ஒருவர் பத்தாம் வகுப்பு மாணவர், மற்றொருவர் பாலிடெக்னிக் மாணவர். தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை பெற்றோர் கண்காணித்தால் மட்டுமே போதை பாதையில் செல்வதை தடுக்க முடியும் என்றனர்.

banner

தகவல் : DINAMALAR

You may also like

Leave a Comment