Home Uncategorizedசென்னை மருத்துவ கல்லூரி விடுதியில் போதைப் பொருள் பயன்படுத்திய 3 பேர் கைது – விற்பனை செய்த இளைஞரும் சிக்கினார்!

சென்னை மருத்துவ கல்லூரி விடுதியில் போதைப் பொருள் பயன்படுத்திய 3 பேர் கைது – விற்பனை செய்த இளைஞரும் சிக்கினார்!

by bait
0 comments

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞர் ரோட்னி ரோட்ரிகோவை போலீஸார் கைது செய்தனர்,

சென்னை: சென்னை மருத்துவ கல்லூரி விடுதியில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக பயிற்சி மருத்துவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மருத்துவ துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பொறியாளர்கள், வட மாநில தொழிலாளர்கள் உள்பட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பல்வேறு தரப்பினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கியுள்ள பயிற்சி மருத்துவர்கள் சிலர் கஞ்சா உள்பட பல்வேறு வகையான போதைப் பொருட்களை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் நேற்று மாணவர் விடுதியில் திடீர் சோதனை மேற்கொண்டார்.அப்போது, அங்கு தங்கி இருந்த பயிற்சி மருத்துவ மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

banner

இதுதொடர்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில், ஆண்கள் பயிற்சி மருத்துவ விடுதிக்கு சென்ற போலீஸார் அங்கு போதைப் பொருள் பயன்படுத்தியதாக பயிற்சி மருத்துவர்கள் தருண், ஜெயந்த், சஞ்சய் ரத்தினவேல் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களது அறையிலிருந்து போதைப்பொருளான 149 கிராம் கஞ்சா மற்றும் வலி நிவாரணிக்காக மருத்துவ துறையில் பயன்படுத்தும் கேட்டமைன் மருந்துகள் கொண்ட 4 குப்பிகளை கைப்பற்றினர்.

இவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக சென்னை சின்னமலை பகுதியில் வசிக்கும் ரோட்னி ரோட்ரிகோ (25) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவரிடமிருந்து 1.25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பிபிஏ பட்டதாரியான ரோட்ரிகோ தனியார் டெலிவரி நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்று கஞ்சா விற்பனையில் அவர் ஈடுபட்டுள்ளார்.

தன்னுடைய நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமான மென்பொறியாளரிடம் ஒரு கிலோ கஞ்சாவை ரூ.30 ஆயிரத்துக்கு வாங்கி அதை சிறு பொட்டலங்களாக்கி ரூ.60 ஆயிரத்துக்கு விற்று வந்தாக போலீஸார் தெரிவித்தனர். இவரது பின்னணியில் உள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பல் பற்றி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தகவல் : KAMADENU

You may also like

Leave a Comment