சென்னை: சென்னை கிண்டியில் என்ஜினியர் ஒருவரின் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டி, ஈஸ்வரி ரத்தினம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராம் நித்திஷ் (26.) தனியார் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணி புரியும் இவரது கார் நேற்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்து பதறிப்போன ராம் நித்திஷ், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இதில் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது.
இது குறித்து அவர் கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கிண்டி போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஒருவர் பீர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து காரில் வீசியது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் கிண்டி, மடுவாங்கரையை சேர்ந்த விஜய பிரபாகரன் (25) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து பிரபாகரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதைக்கு அடிமையான இவர், இரண்டு முறை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். விஜய பிரபாகரன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. போலீசார், எதற்காக கார் மீது பெட்ரோல் குண்டு வீசினார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் கிண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தகவல் : ONEINDIA