சென்னை அம்பத்தூரில் சூட்கேஸ் மற்றும் கைப்பையில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்த நிலையில், ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை அம்பத்தூரில் சூட்கேஸ் மற்றும் கைப்பையில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்த நிலையில், ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா கடத்தி வருவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீஸார், ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணான பதிலளித்துள்ளார்.
இதனையடுத்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, அவர் வைத்திருந்த சூட்கேஸ் மற்றும் கைப்பையை சோதனை செய்தனர். அந்த சூட்கேஸ் மற்றும் கைப்பையில் கஞ்சா இருப்பதைக் கண்ட போலீஸார் உடனே அவரை கைது செய்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த நபர் திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்த எபினேசர் என்பது தெரியவந்தது.
அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி, பட்டாபிராம் சுற்றுவட்டாரப் பகுதிகளி பணியாற்றும் கூலி தொழிலாளிகள் மற்றும் வடமாநிலத்தவர்களுக்கு சில்லறை விற்பனை செய்ய அவர் கஞ்சாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், காவல்நிலையம் அழைத்துச் சென்று கூடுதல் விசாரணை நடத்தினர். பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
தகவல் : INDIANEXPRESS
