விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த திருத்தங்கல் அரசு பள்ளியில் மதுபோதையில் வந்த மாணவர்களை தடுத்து நிறுத்திய ஆசிரியரை மது பாட்டிலால் தாக்கிய சம்பவம் தொடர்பாக ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் சீ.ரா. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் ஆயிரம் பேர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசியல் அறிவியல் பிரிவில் பயிலும் அருள்குமரன் (வயது 17), குருமூர்த்தி (வயது 17) ஆகிய மாணவர்கள் இருவரும் மதிய உணவு இடைவேளைக்குப் பின் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதை அறிந்த அரசியல் அறிவுப்பிரிவு ஆசிரியர் சண்முகசுந்தரம் இரு மாணவர்களையும் தடுத்து நிறுத்தி ஏன் மது அருந்தி வந்தீர்கள் என்று கேட்டு, உங்கள் இருவரையும் தலைமை ஆசிரியரிடம் கூட்டிச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இரு மாணவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த இரண்டு மது பாட்டில்களைக் கொண்டு ஆசிரியர் சண்முகசுந்தரத்தின் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். ரத்தவெள்ளத்தில் சரிந்த ஆசிரியரை சக ஆசிரியர்கள் மீட்டு திருத்தங்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் பணிப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளி வளாகத்தின் முன்பாகக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் : GETLOKALAPP
