Home Uncategorized‘சண்டைக்கு வா..’ – கண்ணாடியை உடைத்த கஞ்சா ஆசாமி; தாக்கப்பட்ட வேலூர் போலீஸ்!

‘சண்டைக்கு வா..’ – கண்ணாடியை உடைத்த கஞ்சா ஆசாமி; தாக்கப்பட்ட வேலூர் போலீஸ்!

by bait
0 comments

வேலூர் கோட்டையில் ‘கஞ்சா’ போதையில் அட்டூழியம் செய்த குற்றப் பின்னணியுடைய நபர், தன்னைப் பிடிக்க வந்த இரண்டு போலீஸ்காரர்களை கூர்மையான கண்ணாடி துண்டால் சரமாரியாகக் தாக்கினார். இதில், அவர்கள் காயமடைந்தனர்.

வேலூர் கோட்டையை நேற்று மாலை சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த இளைஞரை மடக்கிய, ‘கஞ்சா’ போதையில் இருந்த ஆசாமி ஒருவன், திடீரென தாக்கி அவரிடமிருந்து செல்போனைப் பறித்தான். பின்னர், அருகிலிருந்த 10 அடி பள்ளத்தில் இளைஞரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பினான். தகவலறிந்ததும், அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் தமிழரசு, பாலாஜி ஆகிய 2 பேரும் விரைந்து சென்று, அந்த இளைஞரை மீட்டனர். பின்னர், கஞ்சா போதையில் இருந்த ஆசாமியைப் பிடிக்க பின்தொடர்ந்து சென்றனர். அவன், கோட்டை நுழைவுவாயில் முன்புறமிருக்கும் பேருந்து நிறுத்தம் பகுதியில், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக மேல்சட்டையைக் கழற்றி வீசிவிட்டு, அட்டூழியம் செய்துகொண்டிருந்தான்.

போலீஸ்காரர்கள் இரண்டு பேரும், அவனைப் பிடிக்க முயன்றபோது, அவன் அங்கிருந்த பானி பூரி கடையிலிருந்த கண்ணாடியை கையாலேயே உடைத்து, போலீஸ்காரர்களை ‘சண்டைக்கு வா..’ என்று அழைத்தான். விபரீதத்தை உணர்ந்த போலீஸ்காரர்கள் இரண்டு பேரும், அருகிலுள்ள வேலூர் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கொடுத்துவிட்டு, கஞ்சா ஆசாமியை மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது அவன் கையில் வைத்திருந்த கூர்மையான கண்ணாடி துண்டால் போலீஸ்காரர்களை சரமாரியாகக் கிழித்தான். இதில், போலீஸ்காரர்கள் 2 பேருமே காயமடைந்தனர். அவர்களின் கை, கால்களில் ரத்தம் பீறிட்டுக் கொட்டியது.

அதேநேரம், வடக்கு காவல் நிலையத்திலிருந்து விரைந்து வந்த கூடுதல் போலீஸார், கஞ்சா போதை ஆசாமியை மடக்கிப் பிடித்தனர். காயமடைந்த இரண்டு போலீஸ்காரர்களையும் சிகிச்சைக்காக பழைய அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், வேலூர் முள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த 34 வயதான முபாரக் என்பதும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவனைக் கைதுசெய்த போலீஸார், இரவு 8:30 மணியளவில் வேலூர் டோல்கேட் அருகேயுள்ள நீதிபதியின் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அங்கிருந்தும் தப்பி ஓடிய முபாரக், நீதிபதி குடியிருப்புக்கு அருகேயுள்ள அரசு பெண்கள் பிற்காப்பு இல்லத்தின் பகுதியில் பதுங்கிக்கொண்டான்.

banner

20 நிமிட தீவிர தேடுதலுக்குப் பின்னர், முபாரக்கை போலீஸார் கண்டுபிடித்தனர். தன்னைத்தானே கூர்மையான பாட்டிலால் கிழித்துகொண்டதாலும், உடல் முழுவதும் நிறைய காயங்கள் ஏற்பட்டிருந்தன. சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முபாரக் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். இந்தச் சம்பவம், வேலூரில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

தகவல் : VIKATAN

You may also like

Leave a Comment