Home Uncategorizedகோவை மதுபோதையில் தகராறு.. இளைஞரை கொலை செய்து கை, கால்களை கட்டி தண்ணீரில் வீசிய கொடூரம்

கோவை மதுபோதையில் தகராறு.. இளைஞரை கொலை செய்து கை, கால்களை கட்டி தண்ணீரில் வீசிய கொடூரம்

by bait
0 comments

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இளைஞர்களிடையே மதுபோதையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு இளைஞர் தாக்குதல் நடத்தியதில் மற்றொரு இளைஞர் காயமடைந்துள்ளார். ஆத்திரமடைந்த அவரின் நண்பர்கள் இணைந்து அவரை தாக்கி கொலை செய்துவிட்டு கை, கால்களை கட்டி உடலை பவானிசாகர் நீர் தேக்கத்தில் வீசி சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்கள். கொலை, கொள்ளை சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகளவு நடைபெறுவதாக விமர்சனம் வைத்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக கோவையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தகவல் : ONEINDIAகோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள இட்டேரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரின் மகன் லோகநாதன் (வயது 24). கூலித் தொழிலாளியாக இருந்தார். இவருக்கு அம்மன்புதூர் பகுதியைச் சேர்ந்த வெற்றிசெல்வன் (வயது 27, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் நண்பராக இருந்தார். கடந்த ஜனவரி 23 ஆம் தேதிக்கு பிறகு லோகநாதன் மாயமாகியுள்ளார்.

இதனால் அவரின் குடும்பத்தினர் சிறுமுகை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் லோகநாதனின் உடல் பவானிசாகர் அணை அருகே உள்ள கன்ராமொக்கை நீர்தேக்கத்தில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜனவரி 23 ஆம் தேதி லோகநாதனும், வெற்றிசெல்வனும் அம்மன்புதூர் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் லோகநாதன் தாக்கியதில் வெற்றிசெல்வன் காயமடைந்துள்ளார். வெற்றிசெல்வன் தன்னுடைய வீட்டுக்கு சென்று சோகமாக இருந்துள்ளார். வெற்றிசெல்வனுக்கு பெற்றோர் இல்லை.

இந்த சம்பவத்துக்கு பிறகு அவர் தன் நண்பர்களுடனும் சரியாக பேசாமல் இருந்துள்ளார். இதனால் அவருடைய நண்பர் சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வெற்றிசெல்வனை வீட்டுக்கே சென்று சந்தித்துள்ளார். அப்போது காயங்களுடன் அவர் நடக்க முடியாமல் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்த நாளே சரவணன், லோகநாதனை அழைத்து வெள்ளைமொக்கை என்ற பகுதியில் மது அருந்தியுள்ளார்.

சிறிது நேரத்தில் அவர் லோகநாதனை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வெற்றிசெல்வன் மற்றும் அன்னூரைச் சேர்ந்த ராஜ்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மற்றொரு நண்பரும் இருந்துள்ளனர். அவர்கள் மூன்று பேரும் இணைந்து லோகநாதனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

லோகநாதன் இறந்துவிட்டதால் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று அறியாமல் தவித்துள்ளனர். பிறகு லோகநாதனின் கை, கால்களை கட்டி பவானிசாகர் அணை அருகே உள்ள நீர்தேக்கத்தில் வீசியுள்ளனர். சில நாட்களில் அவரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. அதைப் பார்த்த உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் காவல்துறைக்கு தகவல் தெரிந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் லோகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வெற்றிசெல்வன், சரவணன், ராஜ்குமார் ஆகியோரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் : ONEINDIA

You may also like

Leave a Comment