கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானம் கிடைக்காமல் போதைக்காக மெத்தனாலை (மரச்சாராயம்) தண்ணீரில் கலந்து குடித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.நேற்று முன்தினம், திங்கள்கிழமை, கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிலர் மதுக்கடைகள் திறக்கப்படாத காரணத்தால் மெத்தனாலை தண்ணீரில் கலந்து போதைக்காக அருந்தியுள்ளனர்.நீரில் கலந்து மெத்தனாலை அருந்திய சந்திரகாசம் (55) என்பவர் நேற்று, செவ்வாய்க்கிழமை, உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று நபர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் இரண்டு பேருக்கு உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக இருக்கவே அவர்களைப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.இதற்கிடையில், கடலூர் மற்றும் புதுச்சேரியில் சிகிச்சை பெற்று மாயக்கிருஷ்ணன் (48), சுந்தர்ராஜ் (40) இருவரும் சிகிச்சைப் பலனின்றி இன்று, புதன்கிழமை, உயிரிழந்துள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.காவல்துறை விசாரணையில், கடலூர் சிப்காட் வளாகத்தில் இயங்கிவந்த பூச்சிக்கொல்லி மருந்து தயார் செய்யப்படும் தனியார் தொழிற்சாலையில் பயன்பாட்டிற்காக வைத்திருந்த மெத்தனாலை, அங்கே பணிபுரியும் குமரேசன் (26) என்பவர் கொண்டுவந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.”தான் கொண்டுவந்த மெத்தனாலை போதை வஸ்துவாக மாற்ற அதில் தண்ணீர் கலந்து குமரேசன், சந்திரகாசம், மாயக்கிருஷ்ணன், சுந்தர்ராஜ் மற்றும் எழில்வாணன் அனைவரும் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) இரவு அருந்தியுள்ளனர். மெத்தனாலை தவறாக பயன்படுத்திய காரணத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வேதிப்பொருளைப் பாதுகாக்கத் தவறிய தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டது. மேலும், அதனை எடுத்துவந்து விநியோகம் செய்ய குமரேசன் கைது செய்யப்பட்டுள்ளார்,” எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தகவல் : BBC NEWS