
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரம், சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இருக்கிறது. கொடைக்கானலுக்கு, திண்டுக்கல், தேனி, மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர், சென்னை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்ட மக்கள் அடிக்கடி வருகிறார்கள். கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட அண்மை மாநில மக்களும் வருகிறார்கள். மேலும் வெளிநாட்டினரும் கணிசமாக வந்து செல்லும் சுற்றுலா தலமாக கொடைக்கானல் இருக்கிறது.
கொடைக்கானலை பொறுத்தவரை மிகவும் அமைதியான, இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் நகரம் ஆகும். இன்னும் பெரிய அளவில் நகரமயமாகவில்லை. கொடைக்கானல் காடுகளும், பசுமை பள்ளத்தாக்குகளும், அங்கு விளையும் பேரிக்காயும் பலருக்கும் பிடிக்கும்.இதனால் ஒவ்வொரு வாரமும் கொடைக்கானலுக்கு பலர் சுற்றுலா வருகிறார்கள். ஆனால் அப்படி வருபவர்களில் சிலர் மது அருந்துவிட்டு அட்டூழியம் செய்வது நடக்கிறது. அப்படித்தான் ஒருவர் சேட்டை செய்துள்ளார். அவருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம். AD
கொடைக்கானலில் முக்கிய இடமாக இருக்கும் பேருந்து நிலையத்தில் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் மற்றும் உள்ளூர் வாசிகளும் வெவ்வேறு பகுதியில் இருந்து செல்லக்கூடிய இடமாக திகழ்கிறது. நேற்று இரவு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே சென்ற பேருந்தை வழிமறித்து மது போதை ஆசாமி ஒருவர் பேருந்தின் ஓட்டுநரை தகாத வார்த்தையில் பேசியதாக தெரிகிறது.
மேலும், பேருந்தை எடுக்க விடாமல் வழிமறித்து தகாத வார்த்தையில் பேசிய மது போதை ஆசாமியை ஒரு கட்டத்தில் பேருந்தில் இருந்து இறங்கி வந்த ஓட்டுனர் அந்த மது போதை ஆசாமியை அடித்து விரட்டியுள்ளார். இதனை கண்ட சக பயனாளிகளிடம் இச்சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மேலும், தகவல் அறிந்து கொடைக்கானல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மது போதை ஆசாமியை அழைத்துச் சென்று அங்கிருந்து அனுப்பி வைத்தனர். கடந்த வாரம் 70 வயது முதியவர் சரியான சில்லறை கொடுக்காத விவகாரத்தில் பேருந்து நடத்துநர் முதியவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் நடந்தது. தற்போது போதை ஆசாமி அசிங்கமாக பேசியதால், செருப்பை கழற்றி அடித்த ஓட்டுனர் குறித்தும் மக்கள் பேசி வருகிறார்கள்.
தகவல் : ONEINDIA
