Table of Contents
Kanchipuram Crime: “காஞ்சிபுரத்தில் கடன் தகராறில் நண்பனை மது ஊற்றிக்கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.”

காஞ்சிபுரம் அருகே கடன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட விவகாரத்தில், கூலித்தொழிலாளி ஒருவரை அவரது நண்பர்களே மது ஊற்றிக்கொடுத்து கத்தியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன ?
காஞ்சிபுரம் அடுத்த வதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். கூலித் தொழிலாளியான இவருக்கு சுமித்ரா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். லிங்கேஸ்வரன், தண்டலம் பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் சுரேஷ் என்பவரிடம் சிறுகச் சிறுக சுமார் 32 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கடனைத் திருப்பித் தருமாறு சுரேஷ் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், லிங்கேஸ்வரன் தனது நகையை அடகு வைத்துப் பணம் பெற்றுள்ளார். அந்தப் பணத்துடன் சுரேஷ் மற்றும் மற்றொரு நண்பரான பல்லூர் பகுதியைச் சேர்ந்த சரத் ஆகியோருடன் இணைந்து மது அருந்தச் சென்றுள்ளார்.
மது போதையில் ஏற்பட்ட தகராறு
மது அருந்திவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது, மூவருக்கும் இடையே பண விவகாரம் தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போதை தலைக்கேறிய நிலையில் ஆத்திரமடைந்த சுரேஷ் மற்றும் சரத் ஆகியோருக்கும், லிங்கேஸ்வரனுக்கும் இடையே கைகலப்பு உருவானது.
அப்போது ஏற்பட்ட மோதலில், லிங்கேஸ்வரனின் கழுத்தில் பலத்த கத்திக்குத்து விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, சரத் உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி லிங்கேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆரம்பகட்ட விசாரணையில், திட்டமிட்டே மது ஊற்றிக்கொடுத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது அம்பலமானது.
தலைமறைவாக உள்ள சுரேஷை போலீசார் தேடி வருகின்றனர். மது போதையில் நண்பனை நண்பர்களே கொலை செய்த இச்சம்பவம் காஞ்சிபுரம் வதியூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவல் : ABPNEWS
