கரூர் அடுத்த பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது நண்பர் காந்திகிராமத்தை சேர்ந்த ஆசைத்தம்பி (38). இருவரும் சேர்ந்து கண்ணன் வீட்டில் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தனர். வழக்கம்போல் நேற்று முன்தினம் இருவரும் மது அருந்திவிட்டு வீட்டில் உறங்கியுள்ளனர்.
நேற்று (ஜூலை 24) காலை எழுந்து பார்த்த பொழுது ஆசைத்தம்பி வலது மார்பு பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த கண்ணன் அவரது உறவினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் பசுபதிபாளையம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மேலும், சம்பவ இடத்தில் கரூர் மாவட்ட எஸ்பி ஜோஸ் தங்கையா மற்றும் காவல்துறை அதிகாரிகள் மோப்ப நாயுடன் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஆசைத்தம்பி உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கண்ணனை பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட போது, மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கண்ணன் ஆசைத்தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து கண்ணன் மீது பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
தகவல் : GETLOKALAPP
