Home Uncategorizedகஞ்சா போதை: தண்டவாளத்தில் சீருடையில் படுத்து உருண்ட மாணவர்கள் – அதிர்ந்த அரக்கோணம் ஜங்ஷன்!

கஞ்சா போதை: தண்டவாளத்தில் சீருடையில் படுத்து உருண்ட மாணவர்கள் – அதிர்ந்த அரக்கோணம் ஜங்ஷன்!

by bait
0 comments

கஞ்சா போதையால், நிலைகுலைந்துபோன ஐ.டி.ஐ மாணவர்கள் இருவர், சீருடையுடன் ரயில் தண்டவாளத்தில் படுத்து உருண்டது, கடும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

தமிழ்நாட்டில், சர்வ சாதாரணமாக ‘கஞ்சா’ கைமாறிக் கொண்டிருக்கிறது. காவல்துறையினர் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.O, 3.O, 4.O’ என என்னதான் பெயரவைத்து, பண்டல் பண்டல்களாகப் பிடித்தாலும், கஞ்சா விற்பனை குறையவில்லை; கஞ்சாவும் ஒழிந்தபாடில்லை. இப்போது, பள்ளி, கல்லூரி மாணவர்களின் கைகளிலும் மிக எளிதாக கஞ்சா கிடைக்கிறது. இதை உறுதிப்படுத்தும்விதமாக, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஓர் அதிர்ச்சிகர சம்பவம் நடந்திருக்கிறது. அரக்கோணம் அருகே அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ) இயங்கிவருகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் இருவர், நேற்று மாலை 5:30 மணிக்கு, வீட்டுக்குத் திரும்புவதற்காக ரயில் மூலம் அரக்கோணம் ஜங்ஷனுக்கு வந்தனர். அப்போது, இருவருமே கஞ்சா போதையில் இருந்தனர்.

நிற்க முடியாத அளவுக்கு நிலைகுலைந்துபோயிருந்த அந்த மாணவர்கள், ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தபடியே நடைமேடையைக் கடக்க முயன்றனர். அப்போது, ஐந்தாவது நடைமேடைக்கான தண்டவாளத்தில் குப்புற விழுந்து புரண்டனர். ஒரு மாணவன் எழுந்து, இன்னொரு மாணவனின் கையைப் பிடித்துத் தூக்க முயன்றான். கீழே படுத்துக்கிடந்த மாணவனோ எழுந்திருக்க முடியாமல், ஒரு கையில் செருப்புகளை வைத்துக்கொண்டு விழுந்துகொண்டேயிருந்தான். அவனைத் தூக்க முயன்ற மாணவனும், முடியாமல் போக அவனும் விழுந்தான்.

அதிர்ஷ்டவசமாக ஐந்தாவது நடைமேடையில் அந்த நேரத்தில் ரயில் ஏதும் வரவில்லை. இதையடுத்து, தடுமாறித் தடுமாறி எழுந்த மாணவர்கள் பக்கத்து தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயிலின் பெட்டிகளுக்கிடையே விழுந்தனர். இதை கவனித்த பயணிகள், உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் விரைந்து சென்று, மாணவர்களை மீட்டு பெயர், விவரங்களைக் கேட்டனர்.

banner

பதில் சொல்ல முடியாத அளவுக்குத் தடுமாறிக்கொண்டிருந்த மாணவர்களை அறிவுரையுடன் எச்சரிக்கை செய்து, அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவைத்தனர். தண்டவாளத்தில், சீருடையுடன் மாணவர்கள் கட்டிப்பிடித்து புரண்டுகொண்டிருந்த காட்சிகளை பயணிகள் பலரும் செல்போனில் வீடியோவாகப் பதிவுசெய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கின்றனர். இந்த நிலையில், ‘அரக்கோணம் ஜங்கஷனில் ரயில்வே பாதுகாப்புப் படையினரும், தமிழக ரயில்வே போலீஸாரும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். கஞ்சா போதையில் வரும் மாணவர்களைக் கண்டிப்பதுடன் அவர்களுக்கு எங்கிருந்து கஞ்சா கிடைக்கிறது என்பதையும் விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பயணிகள் வலியுறுத்தியிருக்கின்றனர்.

தகவல் : VIKATAN

You may also like

Leave a Comment