Home Uncategorizedகஞ்சா போதையில் வாலிபர்கள் அட்டகாசம்: துறையூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

கஞ்சா போதையில் வாலிபர்கள் அட்டகாசம்: துறையூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

by bait
0 comments

இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

துறையூர் கிராமப்புற பகுதிகளில் கஞ்சா அதிக அளவு புழக்கத்தில் இருப்பதாக கூறி அப்பகுதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த விபரம் வருமாறு;

துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக கஞ்சா போதையில், சில வாலிபர்கள் சாலையில் செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அப்பகுதியில் நடந்து செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் அவர்கள் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும், இதுகுறித்து பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

banner

இதையடுத்து கீரம்பூர் கிராமத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கக்கோரியும், கஞ்சா போதையில் தகராறில் ஈடுபடும் வாலிபர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும் கீரம்பூர் கிராம மக்கள் துறையூர் பச்சைமலை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து அந்த பகுதியில் தடைப்பட்டது.

இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், வீட்டில் இருந்து பொருட்கள் வாங்க கடைக்கு செல்லும்போது கஞ்சா போதையில் வாலிபர்கள் தகாத வார்த்தைகளில் பேசி, வம்பு செய்கின்றனர். இதனால் இளம்பெண்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது என்றனர்.

பலமுறை துறையூர் காவல்துறையில் புகார் கொடுத்தும் கண்டுகொள்ளதால் தற்போது சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

இந்த சாலை மறியலால் மாலை 5 முதல் இரவு 8 மணி வரை என சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக துறையூரில் இருந்து பச்சைமலை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் துறையூர் தாசில்தார் வனஜா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பொதுமக்கள் தெரிவித்த புகார் குறித்து சட்ட ரீதியாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

அதேநேரம், துறையூர் வட்டார மலைப்பகுதியில் பெருமளவு கஞ்சா பயிரிடப்பட்டு, திருச்சி உள்பட பல்வேறு நகரங்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாகவும், கஞ்சா எங்கெங்கே இருக்கின்றது என்று தெரிந்தும் துறையூர் காவல்துறையினர் கண்டும் காணாமல் இருப்பதாகவும், கஞ்சா விற்கப்படும் நபர்களால் சில காவலர்கள் ஆதாயம் பெற்று வருவதால் வழக்கு தொடர்ந்தாலும் வழக்கை நீத்துப்போக செய்வதாகவும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

திருச்சி மாவட்டத்தில் துறையூர் பகுதியில் உள்ள சுற்றுலா தளமான பச்சைமலை, புளியஞ்சோலை உள்ளிட்ட பகுதிகள் காடு மலை நிறைந்து காணப்படுவதால் வாராந்திர விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அங்கு வரும் இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

தகவல் : INDIANEXPRESS

You may also like

Leave a Comment