விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே அரசுப் பள்ளி ஆசிரியரை மதுப் புட்டியால் தாக்கிய 4 மாணவா்கள் பள்ளியிலிருந்து வியாழக்கிழமை நீக்கப்பட்டனா். திருத்தங்கல்லில் உள்ள சீ.ரா. அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை மதிய உணவுக்குப் பிறகு, 12-ஆம் வகுப்பு மாணவா்கள் 4 போ் மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வந்தனா். இதையறிந்த அரசியல் அறிவியல் பாட ஆசிரியா் சண்முகசுந்தரம் அவா்கள் 4 பேரையும் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் செல்ல முயன்றாா்.
அப்போது, ஆசிரியருக்கும், மாணவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இரு மாணவா்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த மதுப் புட்டியால் ஆசிரியரின் தலையில் தாக்கினா்.
இதில் காயமடைந்த அவா் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், விருதுநகா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா், சிவகாசி கல்வி மாவட்ட அலுவலா் சுரேஷ் ஆகியோா் வியாழக்கிழமை பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியா்கள், மாணவா்களிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில், சம்பந்தப்பட்ட மாணவா்கள் 4 பேரும் மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வந்தது உறுதியானது.
இதையடுத்து, 4 மாணவா்களையும் பள்ளியிருந்து நீக்கி கல்வி அலுவலா்கள் உத்தரவிட்டனா்.
தகவல் : DINAMANI
